Saturday, June 8, 2019

நாய்பிடி பூனைபிடி

-------------------------------

என்னத்தை? எதைப் பறையிறது?
ஒரு சொல்லுப் பேச முடியாமல் நெஞ்சு பிடிக்குது. ம்…..,பேசிப் பேசி என்னத்தைக் காண முடிஞ்சுது? பழைய கதையளையும்,படங்களையும் பாக்கப் பாக்க பத்தியெரியுது நெஞ்சு. வீடு வராமலேயே போச்சுது, எங்கடை வெள்ளாமை. யாரைக் குற்றம் சொல்லிறது? இது தான் நடக்குமெண்டு எழுதியிருந்தா, அது தான் நடக்கும் கண்டியளோ! எங்கடை எங்கடை தலையிலை எழுதினதை, எப்பிடி நாங்க மாத்திறது? தர்மம்,நீதி வெல்லுமெண்டிறதெல்லாம், புராணங்களோடை போச்சுது. என்னவோ, எங்கடை இன சனமெல்லாம் இப்பிடி சீரழிஞ்சிட்டம். நாங்க பொத்திப் பொத்தி வளத்த கிளிக்குஞ்சுகளெல்லாம் சுதந்திரம்,விடுதலையெண்டு பறந்தழிஞ்சு போச்சு. நடந்த கதை நடந்த கதை தான்.


என்னத்தை இடிஞ்சு விழுந்தாலும், திரும்பத் திரும்ப கட்டியெழுப்பின சனம் நாங்கள். ஒரு நாள்ளை எல்லாம் கவிண்டு கொட்டிண்டு தலை கீழானாலும், அடுத்த நாள் நிமிர்ந்து நடக்க வைச்ச வாழ்க்கை தான் எங்கடை இத்தனை வருசத்து அனுபவம். எங்கை,என்ன சண்டை நடந்தாலும், அதுக்குள்ளை வாழப்பழகின சனம் நாங்கள். நாங்களே அழுது,நாங்களே துடைச்செண்டு, நாதியில்லையெண்டாலும் ஒண்டுக்கொண்டு உதவியாக ஓர்மத்தை விடாமல் வாழப் பழகினாக்கள் நாங்கள். பாதையைப் பூட்டிச் சாமானை மறிச்சாலென்ன? பங்கரை வெட்டி படுத்துக் கிடந்தாலென்ன? அரிக்கன் லாம்பிலை படிச்சு கம்பசுக்கு போனாலென்ன? எல்லாக் கஸ்ர நஸ்ரங்களையும் கண்டெழும்பி வந்தனாங்கள் நாங்கள்.

இனியும், எங்களாலை ஏலும். மனம் வைச்சா நல்லா முன்னேறி வரலாம். என்ன,ஒரு நாய்க்குணம். ஒற்றுமைப்பட மாட்டம் கண்டியளோ! அண்டைக்குத் தொடக்கம், இண்டைக்கு வரைக்கும் அது கொஞ்சம் எங்களுக்கு கஸ்ரமாத்தான் கிடக்கு. எங்களை மாதிரி திறமைசாலி இனத்துக்கு, அது ஒரு சாபக்கேடு மாதிரித் தொடருது. ”நாங்கள். எங்கடை மண். எங்கடை வாழ்க்கை” எண்டு, எல்லாரும் ஒற்றுமையா கையப் பிடிச்சு எழும்பி நிக்க வேணும். ”நாய்பிடி பூனைபிடி” எண்டு கொழுவிக் கொண்டு திரியாமல், நாட்டுக்கு நாலு நல்லது நடக்குமெண்டா ஓடிப்போய் ஒற்றுமையா நிண்டு ஒப்பேத்தவேணும் கண்டியளோ! ஆளாளுக்கு அங்கனை இங்கனையெண்டு, தனித்தனிய நிண்டு மேளச்சமா வைக்காமல், ஒண்டா நிண்டமெண்டா ஒரு பயல் கிட்ட வரமாட்டான்.

முடியும் பிள்ளையள். முடியும். எங்களாலை முடியாதெண்டு ஒண்டுமில்லை, இந்த உலகத்திலை. மனசு வைச்சு இறங்குங்கோ. ஊர், உலகத்திலை இருக்கிறவை எல்லாருக்கும் தான் சொல்லிறன். விளங்குது தானே!

#உழவாரப்_பொன்னையா#

நடுச்சென்ரர்

---------------------------

நடுவுக்கை வந்து நிக்கிறவைக்கு வணக்கம் கண்டியளோ. நான் உழவாரப் பொன்னையாண்ணை. என்னைப் பெரிசா உங்களுக்குத் தெரியுமோ தெரியேல்லை. வரிசம் பிறந்து முதன் முதலா வந்திருக்கிறன். எப்பிடியெல்லாம் சுகமா இருக்கிறியள் தானே?


நெடுகலும் கரையாலை போகாமல், நடுவுக்குள்ளாலையும் கொஞ்சத்தைச் செருக்குவமெண்டு பாக்கிறன். ஊருழவாரம் பாக்கிறது தான் என்ரை வேலை பாருங்கோ. உடனை, எங்கடை பெண்டுகள் மாதிரி கிடுகுப் பொட்டுக்காலை பக்கத்து வீட்டுச் சண்டையைப் பூராயம் பாக்கிறதெண்டு மட்டும் நினைச்சுப் போடாதேங்கோ. சும்மா அங்கனேக்கை பின்னேரங்கள்ளை, நம்மடை வாய்க்கால் வரம்புகள்ளை கிடக்கிற புல் பூண்டுகளை மெல்லம் மெல்லமாச் செதுக்கிறன்.


சரி. நான் இப்ப நடுச்சென்ரரிலை வந்து நிக்கிறன். யாரடாப்பா இது? இப்பவும் இலக்கியச் சஞ்சிகை எல்லாம் நடாத்திறாங்கள் எண்டு எட்டிப் பார்த்தா, அடியிலை; குட்டிப் பெட்டிக்கை அடங்க முடியாமல் திமிறிக் கொண்டிருக்கிறார் ஒருதர். “கோமகனாம்”. பாக்க, எங்கடை அந்த நாளையை பெல்பொட்டம்ஸ் லோங்சுப் போட்ட, இங்கிலீஸ் வாத்தியார் கணக்காக் கிடக்கு. ஆனா, தமிழ்ழை இப்பிடி அக்கறைப் பட்டு உழைக்கிறார். நல்லம். நல்லம். நடக்கட்டும்.


பின்னை, நடுவுக்குள்ளை இறங்கி நடுவாலை கொஞ்சம் கிண்டிப் பாத்தன் சும்மா. நல்ல நல்ல கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களும் கிடக்கு. வெளியிலை பெரிசா வாசமில்லாட்டியும், வைக்கலைக் கிளறிப் போட்டு எடுத்தொண்டைக் காந்திப் பாக்க நல்ல மணியாத்தானிருக்கு. ஆனா ஒண்டு, மனிசன் கெட்டித்தனமா ஆக்கங்களுக்கெல்லாம் ஆக்களாக்கள் தான் பொறுப்பு. என்னட்டை ஒருதரும் கொடுக்கைக் கட்டிக் கொண்டு, சண்டைக்கு வந்திடாதீங்கோ எண்டு சொல்லியிருக்கு. அதுவும் சரிதான். இப்பத்தையான் இலக்கியக் குஞ்சுகளின்ரை, கொதி காய்ச்சலுக்கெல்லாம், பரியாரீட்டை மருந்து கிடையாது பாருங்கோ. எழுத்தைப் பாக்கிறதுக்கு முதல் எழுதினவன்ரை பின்பக்கத்தைப் பாக்க வெளிக்கிட்டிடுவினம். என்ன செய்யிறது? உது தான் சரி. இதுக்குள்ளை ”இவர்கள் இப்பிடிச் சொல்கிறார்கள்” எண்டு கோள்மூட்டி விடுற பகுதியொண்டும் இருக்குது. வலு சுவாராசியம் தான்.


”அரிசிக்கே கல்லிருக்கு. கல்லெல்லாம் அரிசியில்லை ” எண்ட மாதிரி நடுவுக்கு ஒரு வாசகம். மனிசனுக்கு மண்டை காய்ச்சு போய்ச்சு, விளங்கிக் கொள்ளுறதுக்கிடையிலை. கலைக்குள்ளை பொய்யிருக்கா? இல்லையா? எண்டதைப் பற்றி ஒரு கதையும் இல்லை. உண்மையைப் பற்றி மட்டும் தான் சொல்லுது அந்த வாசகம். ”கலையில் உண்மையுண்டு. உண்மையெல்லாம் கலையில்லை.” அதுவும் சரிதான். கலையுக்குள்ளை உண்மை இருக்கோ இல்லையோ, பச்சைப் பொய்யெல்லாம் இருக்குத் தானே! அதுவும் இப்ப, அரிச்சந்திரன்ரை வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர் கூடிப் போச்சு. ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்லுவினம். எல்லாரும் இப்ப அப்புக்காத்தர் மார் தான். எது உண்மை? எது பொய்யெண்டு கண்டுபிடிக்க முடியாதபடி, ஈரைப் பேனாக்கி பேனைப் பேயாக்கி, கதை சொல்லிறாக்கள் இப்ப கனத்துப் போச்சு கண்டியளோ. திரும்பிப் பாக்கிறன்,குனிஞ்சு பாக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு, ஆளாளுக்கு தாங்கள் தான் வெள்ளையெண்டு அடிச்சடிச்சு விடுகினம்.


”நடு” எண்டோண்ணை, நான் ஏதோ நடுவுநிலைமையா இருக்கும் எண்டதுக்காண்டி வைச்ச பெயரோ எண்டு யோசிச்சன். ஏனென்டா நடுவுநிலைமை எண்டொரு சாமானும் ஒருதருட்டையும் இல்லைக் கண்டியளோ. இது அந்த ”நடு” இல்லை எண்டு இப்ப விளங்குது. இது நடுகிற வேலை பாருங்கோ. விளக்கமாச் சொல்லப் போனா, எழுத்து விதைகளை நடுகிற வேலையைச் செய்யுது இந்த ”நடு”. அப்பிடித்தானே ”நடு”நாயகன் கோமகன்?



உழவாரப் பொன்னையா

குரங்குச் சேட்டை


------------------------------

றோட்டு றோட்டா சுடுதண்ணி ஊத்தின நாய் கணக்கா ஓடித்திரிஞ்சு, கல்லெறியிற வால் முளைக்காத குரங்குகளைப் பாக்க, அனுமான்ரை குறூப் கடல் கடந்து வந்ததெண்ட புராணக் கதைகளை நம்ப வேண்டித் தானிருக்குக் கண்டியளோ! நேத்தையான் மழைக்கு முளைச்ச காளானுகள் மாதிரி இருந்து கொண்டு அவையளின்ரை அட்டகாசங்கள். கவட்டுக்ளை ஒரு மோட்ட சைக்கிளையும் வைச்சுக் கொண்டு வீணி வடிச்சுக் கொண்டு திரியிற விசர் நாயள் மாதிரி அலையுதுகள். எதுக்கு எறியிறம்? ஏன் எறியிறம்? எண்ட ஒரு அறுப்பும் விளங்காமல் கண்ட கண்ட கடையளுக்கெல்லாம் கல்லெறியுதுகள்.


குண்டு வைச்ச தீவிரவாதியளை விட படு பயங்கரமான விசக்கிருமியள் இந்த வானரங்கள். தீவிரவாதம் பேய் எண்டா, இனவாதம் பிசாசு. ஒரு வித்தியாசமுமமில்லை. சொல்லப் போனால் பேயும் பிசாசும் ஒண்டு தான். ஓவெண்டு கத்திக் கொண்டு வாற இந்த ஓநாயளெல்லாம், தங்கடை சொந்தப் புத்தியிலை வேட்டைக்கு இறங்கேல்லை எண்டது மட்டும் தெரியுது. ஓநாயளுக்கு வைன் குடுத்து இயக்கிற நரியள், நடத்திற விளையாட்டுத் தானிது.

என்ன தானிருந்தாலும் அடிக்கிறவை, தானுங் கெட்டு நாட்டையும் கெடுக்கிறம் எண்டதை விளங்கிக் கொள்ள வேணும். அடி வாங்கிறவை மதத்ததை வைச்சுக் கொண்டு, தாங்கள் கொம்பு முளைச்ச கழுதையள் எண்டிற நினைப்பை இனிமேலாவது விட்டிட்டு நாங்க தமிழர் எண்டதை உணர்ந்து கொள்ள வேணும்.

தேவாலயத்துக்கு அடிச்சதுக்கே இந்தத் தேவாங்குகள், இப்பிடிக் கொழுத்தித் தள்ளுதுகளெண்டால், விகாரையிலை வெடிச்சிருந்தா முழு முஸ்லீம்களையும் முடிச்சுத் தான் ஓய்ஞ்சிருப்பாங்கள் போலை கிடக்கு. அட! தமிழருக்குத் தான் கேக்க நாதியில்லையெண்டு பார்த்தால், அல்லாவே கடவுளெண்டிற நாடுகளெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு கிடக்குது. இஞ்சை முகம்மதின்ரை குழந்தையள் பயந்து நடுங்குதுகள்.

குருநாகல்லை கொழுத்திற குரங்குகள், குருநகருக்கு வாறதுக்கு கன நேரமெடுக்காது கண்டியளோ. முந்தி, ஒரு கொம்பன் உள்ளடேலாமல் கிடந்தது. இப்ப முறுக்கிக் கொண்டு வந்தாலும் வந்திடுவாங்கள் எண்டு நினைக்க, வயித்தைக் கலக்குது. குரங்குகளுக்கு குண்டு வெடிச்சது ஒரு நல்ல சாட்டுத் தான். மற்றும்படி தமிழரை வேட்டையாடிற குணம் அவங்கடை இரத்தத்திலை ஊறிப் போயிருக்குக் கண்டியளோ! 

Friday, May 10, 2019

சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?


(ஊருழவாரம் - 23)
-----------------------------

கண்ணாடி பாய்க்கிலை, புத்தகம் கொப்பியைக் கொண்டா எண்டால், பிள்ளையள் பாவக்காயைச் சப்பக் குடுத்த மாதிரி மூஞ்சையைச் சுளிச்சுக் கொண்டு நிக்குதகள். பின்னை என்ன? அதுகள் ஸ்பைடர் மான்..மிக்கி மவுஸ் பாய்க்கெண்டு கொண்டு போனதுகளை திடீரெண்டு இந்தப் பீத்தல் பாய்க்கிலை கொண்டு வாவெண்டா அதுகளுக்கு என்ன விளங்கும்? அந்த நாளேலை, நாங்க வெறுங் காலோடை கையிலை தான் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் போறனாங்களெண்டு, இப்ப போய் கதை சொன்னா, தாற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இப்பத்தையான் பேராண்டியள் தராது கண்டியளோ..


பிள்ளையளுக்கு என்ணெண்டு உந்த ஓட்டைப் பையைக் கொண்டு போறதெண்டு பிரச்சனை. இதுக்குள்ளை வேறை, கடையள்ளை விக்காமக் கிடந்த கண்ணாடி பாய்க்குகள், வலு விலாசமா எங்கும் முன்னுக்கு தொங்குது. எத்தினையெண்டு கண்ணாடி பாய்க்குகள்ளை கொண்டு போறது? மனிசரிப்ப, கடைசியாத் தான் கண்ணாடிப் பெட்டிக்கை போறதெண்டு பாத்தால், கஸ்ர காலம். கண்ணாடிப் பையளோடை திரிய வேண்டிக் கிடக்கு.

நாளைக்கு, தின்னவேலிச் சந்தைக்கு கத்தரிக்காயளை கண்ணாடிச் சாக்கிலை கொண்டு வா எண்டாங்களெண்டா, எல்லாம் கொட்டுப்பட்டு நான் நடுத்தெருவிலை தான் நிக்கோணும். தம்பி பொன். காந்தன் கவிதையிலை எழுதின மாதிரி, இப்பிடியே நிலைமை மோசமாப் போனா, எல்லாரும் கண்ணாடி உடுப்புத் தான் போடோணும் போலை. மானம் முக்கியமா? உயிர் முக்கியமா? எண்டு கேட்டா என்னத்தைச் சொல்லிறதெண்டு தெரியாமல் கிடக்கு.

”சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே? பள்ளிக்குச் சென்றாளோ! படிக்கச் சென்றாளோ?
ஐயோ! மாமி அவளை அங்கே விடாதே!
கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ? ”

எத்தினை பேருக்கு இந்தப் பாட்டு ஞாபகமிருக்கோ தெரியேல்லை.

இப்பத்தையான் சிற்றிவேசனுக்கு ரெண்டு வரி அவசரமாச் சேர்க்க வேண்டியிருக்கும் பொடியளுக்கு.

எப்பிடியெண்டா...

ஐயோ! மாமி அவளை அங்கே விடாதே!
”கண்ணாடி பாய்க்குக்காலை
காதல் கடிதம் தெரிஞ்சிடுமல்லோ.
என்ரை கதை கந்தலாகிக் கிழிஞ்சிடுமல்லோ ”

- உழவாரப் பொன்னையா -




1




ஈயடிச்சான் கொப்பி


 (ஊருழவாரம் - 22)
-----------------------------


பக்குப் பக்கெண்டு வலைக்கே சூடை விழுந்த மாதிரி எக்கச்சக்கம் பேர் பொன்னையற்றை உழவாரச் செருக்கலைப் பாக்க வருகினம் பாருங்கோ. ”வடையும் ரீயும்” சும்மா குடுக்கிறாங்கள் எண்டு கேள்விப்பட்டு எங்கடை தமிழ்க் கூட்டங்கள்ளை வந்து, கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறாக்கள் மாதிரி ஒரு அசுமனும் இல்லாமல், பேசாமல் வந்த கைோடையே பம்மிக் கொண்டிருக்கினம் கனபேர். சும்மா ஐஸ்கிறீம் குடிக்க மட்டும் கோயில் திருவிழாக்களுக்கு வாற சனங்கள் மாதிரி, வந்திட்டுப் போக்கூடாது பாருங்கோ. நானென்ன காசே பவுணே கேட்கிறன்? வாறவை, பொன்னையாண்ணையை தேடி வாசிக்கிறவையா இருக்கோணும். வாசிச்சிற்று நாலு கருத்துச் சொல்லிறவையா இருக்கோணும். கண்ட கண்ட கட்சியள் மாதிரி ஆக்களைச் சேத்து வைச்சு என்ன பிரியோசனம் சொல்லுங்கோ? . இவரிட்டை ஒரு நல்ல மீனுமில்லை. எல்லாம் நாறல் மீன் தானெண்டு நினைக்கிறவை மெல்லமா தலையைச் சொறிஞ்சு கொண்டு நடையைக் கட்டலாம். நானொண்டும் வாங்கோ! வாங்கோ! எண்டு கையைப் பிடிச்சு இழுக்க மாட்டன் கண்டியளோ.

கதையோடை கதையா ஒண்டைச் சொல்ல வேணும் உங்களுக்கு. யாரும், பாலர் வகுப்பிலை விட்ட விளையாட்டுக்கள் மாதிரி இஞ்சை விடாதேயுங்கோ. கொப்பி அடிச்சுக் கொண்டு போய், நீங்க ஆத்தின தேத்தண்ணி மாதிரி அங்கினேக்கை யாருக்கும் குடுக்காதேங்கோ. பொன்ணையாண்ணையிட்டை பிடிபட்டியளெண்டா, வெளு வெளெண்டு வெளுத்துப் போடுவன் கண்டியளோ வாயிலை வாறதுகளாலை. பொன்னையாண்ணைக்கு காதுக்கை கத்தை மயிரிருக்கு. படு கோபம் வரும். சொல்லிப் போட்டன். தெரியும் தானே உங்களுக்கு. பிறகு தமிழிலை எழுதிக் கொண்டிருக்கிற என்னை செந்தமிழிலை எழுத வைச்சிடாதேங்கோ பிள்ளையள்.

பெரிய பெரிய பேப்பர்காரரே ஈயடிக்கத் தானே செய்யினம் பாருங்கோ. ஆளுக்கொரு பெட்டிக் கடையை இணையத் தளத்திலை திறந்து போட்டு, ஆள்மாறி ஆள் ஈயடிச்சுத் தானே பிழைச்சுக் கொண்டிருக்கினம். பாத்தெழுதேக்கையெண்டாலும் சரியா எழுதோணும். கேட்டுக் கேள்வியில்லாமல் பொட்டுக்காலை புகுந்து, பயித்தங்கொடியளைக் கடிச்சுப் போட்டுப் போற கள்ளாடுகள் மாதிரி களவெடுத்துக் கொண்டே, கடைசியா இருக்கிற எழுதினவன்ரை பெயரை வெட்டிப் போட்டு தங்கடை பெயரைக் கொட்டை எழுத்திலை போட்டு, பெரிய வித்துவப் பண்டிதர்மார் மாதிரி விலாசம் அடிக்கிறவை எக்கச்சக்கமாப் புளுத்துப் போச்சுதிப்ப.

”சுடச்சுட செய்திகள்” எண்டு ஏதோ எண்ணெய்த் தோசை முறுகலாக் குடுக்கிற மாதிரி பீய்த்திப் போட்டுப், பிறகு பாக்கோணும் அவையின்ரை வண்டவாளங்களை. கண்மண் தெரியாமல் காதுமூக்கு வைச்சு எழுதிப்போட்டுப் பிறகு யாரும் பாக்க முதல் விறுக்கு விறுக்கெண்டு எச்சில் போட்டு அழிக்கிற விளையாட்டுத் தான் இப்ப கனபேர் நடத்தீனம் கண்டியளோ.

- உழவாரப் பொன்னையா -

மயிரை விட்டான் சிங்கன்

 (ஊருழவாரம் - 21)
-----------------------------


”பழைய குருடி கதவைத் திறவடி” எண்ட கதையா பாழ்படுவார் திரும்பத் தொடங்கீட்டாங்கள் பத்திடத்திலை செக் பண்ணிறதுக்கு. எங்கடை சாமான் சக்கட்டுக்கை கைவைச்சுக் கிண்டிறதிலை அவங்களுக்கொரு பரமசுகமிருக்குப் போலை கண்டியளோ. என்னத்தைச் செய்யிறது? எந்தப் பெரிய கொம்பனும் துவக்குக்கு பயப்பிட்டுத் தானே ஆகவேணும் பாருங்கோ. எங்க பாடு திண்டாட்டம் தானினி. கையைத் தூக்கு..காலை விரி..பெல்ரைக் கழட்டு எண்டு இனி மனிசரை உரிச்ச கோழி மாதிரி பழைய படி ஒவ்வொரிடத்திலையும் பிச்சுப் பிடுங்கித் தான் விடுவங்கள் போலை.

இதுக்குள்ளை நம்மடை வெளிநாட்டுக்காரருக்கு தங்கடை கவலை. அநியாயமாப் போட்ட ரிக்கற்றைக் கான்சல் பண்ண வேண்டி வந்திட்டுது. வாற திருவிழாக்களுக்கு கமராவையும் கழுத்திலை கொழுவிக் கொண்டு கட்டைக் காற்சட்டையோட திரிவமெண்டு போட்ட பிளானிலை மண்ணள்ளிப் போட்டிட்டாங்களாம். இதுக்குள்ளை நம்மடை றவல் ஏஜென்சிக்காரர் விடுவினமே..கான்சல் பண்ணிறதுக்கு வேறை கனக்கக் கேக்கினமாம். ”சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி” எண்ட கதையா..எல்லா வில்லங்கங்களையும் பழைய படி வீதியிலை கொண்டு வந்து விட்டிட்டுப் போட்டுதுகள் விறுத்தங் கெட்டதுகள்.

இனி வேறை? யாரைக் கண்டாலும் பயமாயிருக்கு. இப்பத்தைப் பெடியளுக்கு ஒரு சின்னத் தாடி வைக்கிறது தானே பசன் பாருங்கோ. அட...கலியாண மாப்பிளையள் கூட மாமரத்திலை கட்டின தேன்கூடு மாதிரித் தாடியோடை தானே தாலி கட்டீனம் கண்டியளோ. அது தான் இப்பத்தையான் குமருகளுக்குப் பிடிக்குதாம். என்ன கண்டறியாத எடுப்பெண்டு கேக்கிறன். இப்ப இதோடை கன பெடிப்பிள்ளையள் மயிரை விட்டான் சிங்கனெண்டு எல்லாத்தையும் வழிச்சுப் போட்டுத் திரியினம். அது தான் சொல்லிறது. மாட்டுக்கு மாடு சொன்னாக் கேக்காது. மணி கட்டின மாடு தான் சொல்லோணும் எண்டு.

அங்காலிப் பக்கம் பெரிசா செக்கிங்குள் இல்லையாம். எல்லாக் கோதாரியும் எங்கடை தலையிலை தான். என்னத்தைச் சொல்ல. நம்ம தலையெழுத்து அப்பிடி. அடிக்கிற வெய்யிலுக்கு நாலைஞ்சு வேப்பமிலையைப் பிடுங்கி பொன்னையாண்ணை தன்ரை பெல் மண்டையிலை வைச்சு தலைப்பாக் கட்டிக் கொண்டு போக சந்தியிலை நிண்டதொண்டு மறிச்சுப்போட்டுது நேற்று. பொன்னையாண்ணையைப் பாக்க மன்மோகன் சிங் வெறும் மேலோடை உழவாரத்தோடை சைக்கிள்ளை வாற மாதிரி இருந்திருக்கோணும் அந்தப் பொடிக்கு. தலைப்பாகையைக் கழட்டச் சொல்லிக் கையைக் காட்ட...நான் படையப்பா பாட்சா மாதிரி ஒரு ஸ்ரைலாக் கழட்டினன் பாருங்கோ. புறாக்குஞ்சுகள் மாதிரி வேப்பமிலையள் பறந்து போகப் பொடி பயந்து திடுக்கிட்டுப் போச்சு.

அங்கினேக்கை பிறகொரு மாதரி ”வெயில் சுடிங். வேப்பமிலை வைச்சிங். நல்லாக் குளிரிங்” ...எண்டு பொன்னையாண்ணைக்குத் தெரிஞ்ச அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சீ இங்கீலீசெல்லாம் எடுத்து விட்டிட்டு ஒரு மாதிரிக் கழண்டு வந்திட்டன். அப்பிடிப் பாருங்கோ. அவங்களுக்கும் இப்ப பழைய படி வயித்தைக் கலக்குது போலை. எங்கை என்ன வெடிக்குமெண்டு முழுசிக் கொண்டு நிக்கிறாங்கள். அதுகளும் பாவங்கள் தானே..யார் பெத்ததுகளோ..சம்பளத்துக்காண்டி இப்பிடி சந்தி வழிய நிண்டு அடுத்தவையின்ரை சாமானுகளுக்கை கைவிட்டுக் கிண்ட வேண்டிக் கிடக்கு. நான் எங்கடை பையளைச் சொல்லிறன். விளங்குது தானே.

கோயில் வழியவுமல்லே இப்ப போய் நிம்மதியா நிக்க முடியாமக் கிடக்கு கண்டியளோ. அங்கனேக்கை ஒரிடத்திலை தான் மனிசர் போய் ஐஞ்சு நிமிசமெண்டாலும் நிம்மதியா நிண்டு குறை நிறையளைச் சொல்லி ஆறிப் போட்டு வாறது பாருங்கோ. அண்டைக்குப் பிறகு இப்ப கோயிலுக்குப் போறதெண்டாலே கொல்லக் கொண்டு போற மாதிரிக் கிடக்கு. அப்பவும் முந்தநாள் கச்சேரியடிக்கு ஒரு அலுவலாப் போன இடத்திலை நல்லூரானைக் கண்டிட்டு ஒருக்கா ஒரு கற்பூரத்தைக் கொழுத்துவமெண்டு இறங்கினன். வாசல்லையே நிண்டு கொழுத்திப் போட்டு அந்த வாசத்தில மெய்மறந்து கொஞ்சம் கண்ணை மூடிக் ”கடவுளே” எண்ட படார் எண்டுது ஒரு சத்தம்.

உண்ணாணத் திடுக்கிட்டு தடுக்கி விழப் பார்த்தார் பொன்னையாண்ணை. கோதாரி விழுந்தது. பக்கத்திலை ஒரு பக்திப் பழமொண்டு தேங்காயை சிதறியடிச்சுப் போட்டு ரெண்டு கையையும் வானத்துக்கு விரிச்சு ”அப்பனே முருகா”…எண்டு கண்ணை மூடிக் கொண்டு நிக்குது.

-உழவாரப் பொன்னையா -

Tuesday, May 7, 2019

வெள்ளையும் சொள்ளையும்

 (ஊருழவாரம் - 20 )
------------------------------

குயில் குஞ்சுக் கலரிலை இருந்த பெடிச்சியளெல்லாம் திடீர் திடீரெண்டு கூப்பன் மாக்கலரிலை உலாவித் திரியேக்கையே யோசிச்சனான். பொன்னையற்றை கண்ணு தான் பொச்சடிச்சிட்டுதாக்கும் எண்டு மனசுக்கை நினைச்சுக் கொண்டிருந்தனான். கட்டையிலை போற வயசிலை இதென்னடாப்பா இது? பச்சைக் கறுப்பியளெல்லாம் பளபள எண்டு தெரியுது எண்டு யோசிச்சன்.

இப்ப தானே விசயம் வெளிக்குது கண்டியளோ! இப்பத்தையான் பொடிச்சியளுக்கெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஆகிடோணுமெண்டு வெறி பிடிச்சிட்டுது. பொடிப்புள்ளையளும் ஹன்சிகா கலரிலையும்...தமன்னா கலரிலையும் பொம்பிளை கொண்டு வா எண்டா அதுகள் தான் என்ன செய்யிறது? ஆனா,கடைசியைிலை வயது வட்டுக்குள்ளை போய் முடிய...முன் மண்டையும் வெட்டையாக கவுண்டமணி கலரிலை தான் கட்டி முடிக்கிறது பாருங்கோ. அது வேறை கதை.

கடையள்ளை விக்கிற கண்ட நிண்ட கிறீமுகளை வாங்கி இராப்பகலா மூஞ்சையள்ளை பூசிப்பூசியே முழுமதி ஆயிடுறதெண்டு கனவு காணுதுகள் பொடிச்சியள். முழத்துக்கு முழம் முளைச்சிருக்கிற பியூட்டி பாலருக்ளுக்குள்ளை போய் முகத்தை குடுத்துக் கெடுக்கிறது தான் வேலை. கேட்டா இது தான் இப்பத்தையான் ஸ்ரைலு எண்டிறது. அட கடவுளே...அந்த நாளையிலை பொம்பிளையள் உதுகளொண்டுமில்லாமல் என்ன மாதிரி வடிவா இருந்ததுகள்? ஒரு பியூட்டி பாலரும் இல்லாமல் தானே கலியாணங்களே நடந்தது. மேக்கப்பாம் மேக்கப்பு. எல்லாம் வெறும் பம்மாத்தப்பூ. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்ட கதையா அருமந்த வடிவான முகங்களை அணக்கொண்டாப் படத்திலை வாற வில்லன்ரை முகம் மாதிரி கடைசியா ஆக்கீடுதுகள்.

அது பருங்கோ, ரீவியள்ளை...சீரியலுகள்ளை தூரத்திலை நல்ல லைற் வெளிச்சங்கள்ளை பாக்க சும்மா பளபளக்கிற வடிவு தான். ஆனா வாழ்க்கையிலை குளோசப்பிலை எல்லோ நெடுகலும் பாக்கவேணும் பொடியங்களா? பேய்க்கு வாழ்க்கைப்பட்ட கதையா எல்லோ இருக்கும் பாருங்கோ. பொம்பிளைப் பிள்ளையளை கண்ட கண்ட கரிக்கட்டியாலை முகம் மூக்குக்கு பூசிக் கொண்டு வந்து கத்தரித் தோட்டத்து வெருளி மாதிரி நடு வீட்டுக்கை நிப்பாட்டி வைச்சா எப்பிடி இருக்கும் என்ரை ராசாத்திமாரே? இயற்கை வடிவு தான் வடிவு. அது தான் நிரந்தரமும். நல்லா விளங்குதோ? மெய்யைத் தான் பறையிறன். கோவிக்காதையுங்கோ குஞ்சுகளே!

சில நேரங்கள்ளை பொடிச்சியள் வீடு வழிய தாங்களே தங்களுக்கு பேசியல் செய்யிறதெண்டு சொல்லி சாப்பாட்டுக்கு வாங்கி வைச்ச தயிருகளையும்...வாழைப்பழங்களையும் கூட அடிச்சு அப்பிக் கொண்டு நிண்டிடுதுகள். உது தெரியாமல் பொன்னையாண்ணை ஒரு நாள், பேத்தியாரைத் திடுமெனப் பாத்து உண்ணாணப் பயந்து போனாரெண்டாப் பாருங்கோவன்.

சரி. விசயத்துக்கு வருவம். இப்பென்னடா எண்டா, ஒரு பிள்ளைக்கு பியூட்டி பாலரிலை பூசக் குடுத்த கிறீமாலை பிரச்சனையாம். தோல் பழுதாப் போச்சாம். உது தேவை தானோ? பிள்ளையளை விட பிள்ளையின்ரை தாய்மாருக்குத் தான், இந்த வியாதி முத்தி்க் கிடக்குது. அவையைப் பாக்கோணும். சந்திரிக்கான்ரை காலத்திலை, பனம்பழத்திலை உடுப்புத் தோய்ச்ச கணக்கா, அன்ரிமார் அடிக்கடி சொண்டுக்கு எடுத்தெடுத்து தேய்தேயெண்டு தேய்ச்சுக் கொண்டே திரிவினம். அடிஅடியெண்டு சிவப்படிச்சு சொண்டை ரணகளமாக்கி வைச்சிருப்பினம்.

பத்திக் கொண்டு தான் வரும் பாக்க. அதுக்குள்ளை அவை பெரிய கிளியோ பாட்ரா நினைப்பிலை சிரிச்சும் விடுவினம் கண்டியளோ... அவனாரோ ஒருவன் எழுதி விட்டான். ”சிரிச்சா..சிரிப்பிலை...நூறு பேரு செத்துப் போயிட்டான்” எண்டு. என்னெண்டு செத்திருப்பாங்கள்? சிரிப்பைப் பார்த்தா பயத்திலை தான். வேறை என்ன?

அம்மா தாய்க்குலமே...கண்ட நிண்டதுகளைப் பூசி வியாதியளை விலைக்கு வாங்காதேங்கோ.
என்ன தான் இருந்தாலும் அன்னம் அன்னம் தான்.

- உழவாரப் பொன்னையா -